For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தரவேண்டும்’ - யுஜிசி உத்தரவு!

12:06 PM Jun 16, 2024 IST | Web Editor
‘சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தரவேண்டும்’   யுஜிசி உத்தரவு
Advertisement

செப். 30-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தையும் கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மாணவர்கள் பலர் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டு பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அந்த சேர்க்கையை ரத்து செய்வர். அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் கட்டிய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி தரவேண்டும். ஆனால் சில கல்லூரிகள் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், கட்டணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த கல்வியாண்டில் செப். 30க்குள் கல்லூரிகளில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தையும் கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி தெரிவித்துள்ளதாவது;

“கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்துவிட்ட மாணவர்களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பி தரவேண்டும். ஆனால், இதை சில கல்லூரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகளை கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

அதன்படி கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி தரவேண்டும். அதேபோல், அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்தால், சேர்க்கை பணிகளுக்காக அவர்களிடம் ரூ.1,000 மட்டும் வசூலிக்கலாம். அதற்கு பின்பு சேர்க்கையை ரத்து செய்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கான கட்டணத்தை பிடித்தம் செய்துக் கொள்ளலாம்.

இந்த கொள்கை யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் பொருந்தும். எக்காரணம் கொண்டும் முழு கல்வியாண்டு அல்லது நடப்பு பருவத்துக்கான கட்டணங்களை பிடித்தம் செய்யக்கூடாது. இல்லையெனில் விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement