டொனால்ட் ட்ரம்ப்புக்கு சாதகமான துப்பாக்கிச் சூடு? தடுமாறும் பைடன்... வெற்றி யாருக்கு?
அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ட்ரம்புக்கு சாதகமாக உள்ள நிலையில், நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும் அவருக்கு சாதகமாக உள்ளதாக உலகளவில் பேச்சுகள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் 81 வயதாகும் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் 78 வயதாகும் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர், தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக ஆபாசப் பட நடிகைக்குப் பணம் அளித்த விவகாரத்தில் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் நீதிமன்றம் கடந்த மே 31-ஆம் தேதி அறிவித்தது. குற்ற வழக்கில் அந்த நாட்டின் அதிபராக இருந்த ஒருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
ஆனால், வயோதிகம் காரணமான தடுமாற்றங்களால், இதைப் பயன்படுத்தி அவரை வீழ்த்த முடியாத நிலையில் அதிபர் ஜோ பைடன் இருக்கிறார். அதிபர் ஜோ பைடன் தனது பிரசாரத்தின்போதும் பேட்டிகளின்போதும் தடுமாறுவது அவரது ஆதரவாளர்களிடையே மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேரடி விவாதங்களில் பங்கேற்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த விவாதம் நாடு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பாகும். அதன்படி, அட்லாண்டா நகரில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது பைடன் பேச வார்த்தைகளைத் தேடி நீண்ட நேரம் யோசித்தது, குழறியபடி பேசியது, அர்த்தமின்றி பதிலளித்தது போன்றவற்றால் அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்த விவாதங்களில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று பைடன் சூளுரைத்தார். எனினும், பைடனின் தடுமாற்றத்தால் டிரம்ப் எளிதாக வென்றுவிடுவார் என்று கருதியதால், போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று 15-க்கும் மேற்பட்ட அவரது கட்சி எம்.பி.க்களே போர்க்கொடி எழுப்பி உள்ளனர்.
‘ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கினால் அவரால் வெல்ல முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளதா' என்று பைடனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'அதிபராகத் தகுதி இல்லை என்று நினைத்திருந்தால் டிரம்ப்பை துணை அதிபராகத் தேர்வு செய்திருக்க மாட்டேன்' என்று கூறி அதிர்ச்சி அளித்தார் பைடன். துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக தவறுதலாக டிரம்ப் என்று பைடன் கூறிவிட்டார்.
அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், வாஷிங்டன் மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை பேச அழைத்தபோது, 'உக்ரைன் அதிபர் புதினை பேச அழைக்கிறேன்' என்று வாய்தவறி கூறினார் பைடன். உடனே சுதாரித்துக் கொண்டு, 'புதினை தோற்கடிப்பதிலேயே எனது கவனம் உள்ளதால் அவர் பெயரைக் கூறிவிட்டேன்' என சமாளித்தார்.
இதுபோன்று மாற்றிப் பேசுவது பைடனுக்கு புதிதொன்றுமல்ல. பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, தான் துணை அதிபராகப் பணியாற்றியதை அண்மையில் ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தபோது, 'கருப்பு நிற அதிபருடன் பணியாற்றிய முதல் கருப்பு நிறப் பெண்' என தன்னைத்தானே தவறுதலாக குறிப்பிட்டுக் கொண்டார்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்தேன் என்று கூறுவதற்குப் பதிலாக, முன்னாள் அதிபர் மிட்டராண்டை சந்தித்ததாக குறிப்பிட்டார். ஆனால், மிட்டராண்ட் 1996-ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார்.
2008-இல் பெரும் பொருளாதார மந்த நிலையிலிருந்து (ரிசெஷன்) மீண்டுவர நான்சி பெலோசி உதவினார் என்று கூறுவதற்குப் பதிலாக, பெரும் மன அழுத்தத்தில் (டிப்ரஷன்) இருந்து என்று கூறி, பின்னர் திருத்திக் கூறினார்.
வயோதிகம் காரணமாக இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டிருந்தபோதும், டிரம்ப்பை தோற்கடிக்க பைடனால்தான் முடியும் என்று கருதி அதிபர் வேட்பாளராக உள்கட்சித் தேர்தலில் அவரையே ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் தேர்வு செய்தனர். ஆனால், டிரம்ப்புடனான நேரடி விவாதத்துக்குப் பின்னர் பைடனின் செல்வாக்கு சரியத் தொடங்கி உள்ளது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் டிரம்ப்புக்கே சாதகம் என்று கூறியுள்ளன. இந்த நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) பிரசாரத்தில் ஈடுபட்டபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும் அவருக்கு சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் மாநாடு, அதையடுத்த பேட்டி ஆகியவற்றில் பைடன் தடுமாறியது அவருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன. அதிபர் பைடன் போட்டியிலிருந்து விலகி வேறொருவருக்கு வழிவிடுவாரா அல்லது தனது பிடிவாதம் காரணமாக டிரம்ப்பின் வெற்றிக்கு வழிவகுப்பாரா என்பதுதான் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய அளவில் எழுந்திருக்கும் கேள்வி.