மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த அப்பாவு!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தினார். அதன்படி முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அப்பாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதனைத்தொடர்ந்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த துணைத் தலைவர் பிச்சாண்டி ஏற்பாடு செய்தார். எண்ணிக் கணிக்கும் முறையில் நடத்தப்பட்ட இந்த டிவிஷன் வாக்கெடுப்பும் தோல்வியில் முடிவடைந்தது. அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவு தெரிவித்தனர். 154 எதிர்த்தனர். நடுநிலை வகையில் யாரும் இல்லை.
தீர்மானத்தை எதிர்ப்போர் அதிகமாக இருந்ததால் ஆர்.பி. உதயகுமார் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியுற்றதாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்துள்ளார். இதனால் அப்பாவு சபாநாயகராக தொடர்வார். குறிப்பாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓபிஎஸ் தரப்பு மற்றும் செங்கோட்டையன் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடதக்கது.