“தந்தை நலமுடன் உள்ளார்” - கார்த்தி சிதம்பரம்!
குஜராத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று கலந்துகொண்டார். அப்போது வெயிலின் தாக்கத்தால் ப.சிதம்பரத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்திருந்த ப. சிதம்பரத்தை, உடன் இருந்த நிர்வாகிகள் அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ப.சிதம்பரம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை நலமுடன் உள்ளார் என அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலுமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பங்கேற்றிருந்தார்.