பணம் பறிக்க முயன்ற ஓலா டிரைவர்..! வீடியோ வைரல்!
பயணிகளை ஏமாற்றி பணம் பெறுவதற்காக தனது தந்தை இறந்துவிட்டதாகவும், தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தான் தற்கொலை செய்யப்போவதாகவும் கூறிய ஓலா டிரைவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார் புக் செய்து செல்லும் பயணிகளிடம் உருக்கமாக பேசி பணம் வாங்க நடிப்பது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றுள்ளது. யூடியூபர் அனிஷா தீக்ஷித், ஓலா டிரைவர் ஒருவருடன் நடந்த உரையாடலை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மும்பையில் உள்ள பாந்த்ராவில் தனது வீட்டில் இருந்து வாகனத்தை புக் செய்த நிலையில், அவர் வாகனத்தில் ஏறியதும் அந்த வாகன ஓட்டுநர் பேச்சுக்கொடுத்துள்ளார்.
அந்த ஓட்டுநர் தனது தந்தையை இழந்துவிட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு முன் தன்னிடம் இருந்த பணத்தை சிலர் கொள்ளையடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பயணம் முழுவதிலுமே தனது தற்கொலை எண்ணத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார். இதையெல்லாம் புகாராக அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், மீண்டும் மீண்டும் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே சமயத்தில் தனது முன் இருக்கும் கண்ணாடி மூலம் அனிஷா என்ன செய்கிறார் என்பதையும் அடிக்கடி அந்த டிரைவர் கவனித்துள்ளார். இதைக் கண்டுகொண்ட அனிஷா மோசடி செயலாக இருக்கலாம் என உணர்ந்துள்ளார். இதனையடுத்து அனிஷா, தான் அவசரமாக போன் செய்ய வேண்டும் என்றும் எனவே வண்டியை நிறுத்துமாறு கேட்டும், ஓட்டுநரோ வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதாகவும் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.
இது பயணிகளிடம் பணம் பறிக்கும், முயற்சி என உணர்ந்த அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இதுகுறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயற்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதலில் வெளியிட்ட வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து சமந்தப்பட்ட நிறுவனம் அவர் மீது நடிவடிக்கை எடுத்துள்ளது.