இரண்டு மகன்களையும் காப்பாற்றி விட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த தந்தை!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக கோவையில் இருந்து சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். தொடர்ந்து வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் மற்றும் விகாஷ் ஆகியோருடன் சேகர் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார்.
அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சசிதரன் மற்றும் விகாஷ் ஆகிய இருவரும் வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இரண்டு சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அம்மா அனிதா அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். இதனிடையே வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது இரண்டு மகன்களையும் சேகர் காப்பாற்றிவிட்டு, நீரின் வேகத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் அவர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவிநாசிபாளையம் காவல் நிலையம் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவலைத் தொடர்ந்து காவல் நிலைய அலுவலர் முத்துக்குமாரசுவாமி தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட சேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.