நோன்பு கடைபிடித்த கிரிக்கெட் வீரர் - மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைத் ஜாபர் கான்(வயது 40) என்பவர் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து அங்குள்ள ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிளப் அணியில் விளையாடி வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரியில் நடந்த ஓல்ட் கான்கார்டியன்ஸ் Vs பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் அணிகளுக்கிடையே நடந்தபோட்டியில் பங்கேற்றார்.
அப்போது ஜுனைத் ஜாபர் கான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது வெப்பத்தின் தாக்கம் (41.7°C) அதிகமாக இருந்ததால் தீடிரென மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடிலெய்டு டர்ஃப் கிரிக்கெட் சங்க விதிகளின்படி, போட்டிகள் 42°C இல் ரத்து செய்யப்பட வேண்டும். இருப்பினும் 40°C வரை வெப்பநிலை இருந்ததால் போட்டி அனுமதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் விளையாடி வந்த கிளப் இச்சம்மவம் குறித்த அறிக்கையில், எங்கள் அணியின் மதிப்புமிக்க வீரர் கான்கார்டியா கல்லூரி ஓவலில் விளையாடும்போது மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டார் என்றும் துணை மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவில்லை என்றும் அறிவித்தது. மேலும் இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தது
இச்சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் ஜுனைத் ஜாபர் கான் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விளையாடியதால் இத்துயரச் சம்பவம் நேர்ந்ததாக கூறுகின்றன.