தொடரும் விவசாயிகள் போராட்டம் - காய்கறி விலை உயர வாய்ப்பு!
விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடரும் நிலையில், டெல்லியில் காய்கறிகளின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காயிகறி விலை உயர்வு குறித்து டெல்லி காஜிபூர் சந்தை வியாபாரிகள் கூறியதாவது;
காய்கறி விலைகளில் தற்போது மாற்றம் இல்லை. போராட்டம் தொடர்ந்தால், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து பாதிக்கப்படும். இதன் காரணமாக காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார். மற்றொரு வியாபாரி கூறுகையில், பஞ்சாபிலிருந்து காய்கறி வரத்து பிரச்னை காரணத்தால் கடந்த 15 நாட்களில் கேரட் கிலோவுக்கு ரூ. 4 உயர்ந்திருக்கிறது. போராட்டம் தொடர்ந்தால் காய்கறிகளின் விலை அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.