"மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பாம்பு கடித்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது,
"கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற விவசாயியை நச்சுப் பாம்பு கடித்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். விவசாயி செந்திலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயி செந்திலை பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே அவர் மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு மருத்துவர் இல்லாததால் 3 மணி நேரமாகியும் செந்திலுக்கு மருத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால் தான் அவர் உடலில் நஞ்சு பாய்ந்து உயிரிழந்திருக்கிறார். ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும்; மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதி பின்பற்றப்படாததால் ஓர் அப்பாவி உயிரிழந்திருக்கிறார். திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை எந்த அளவுக்கு செயலிழந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயலற்ற தன்மையால் அப்பாவி மக்கள் பாம்பு கடித்து உயிரிழப்பது இது முதல் முறையல்ல.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சையின்றி பாம்பு கடித்தவர் பலி- ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற விவசாயியை நச்சுப் பாம்பு கடித்த நிலையில்,…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 30, 2025
கடந்த 2023-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாததால், பாம்பு கடித்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட முரளி என்பவர் உயிரிழந்தார். இந்த விஷயத்தில் அரசின் தோல்விக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மனைவி அருணாவுக்கு அரசு வேலையும், ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதன் பிறகு தமிழக சுகாதாரத்துறை திருந்தாததால் தான் இப்போது செந்தில் என்ற அப்பாவி உயிரிழந்திருக்கிறார்.
செந்திலின் குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள ரூ.3 லட்சம் இழப்பீடு போதாது; ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்து விட்டன. செயலற்ற திமுக அரசின் முகமூடிகள் ஒவ்வொரு நாளும் கிழிந்து வருகின்றன. அத்தனைக்கும் சேர்த்து ஒட்டுமொத்த தண்டனையாய் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள். இது உறுதி"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.