''போதிய தண்ணீர் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவில்லை'' - விவசாயிகள் கண்டனம்...
அணைப்பட்டி பேரணை பெரியார் கால்வாயில் ,போதிய தண்ணீர் இருந்தும்
பாசனத்திற்காக தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி பேரணை பெரியார் பாசன கால்வாயில் இருந்து திருமங்கலம் பகுதிக்கு பத்து நாட்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மதுரை மாவட்டம், திருமங்கலம் உசிலம்பட்டி தாலுகா விவசாய சங்க தலைவர் ராமன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் அன்பரசன் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமங்கலம், உசிலம்பட்டி தாலுகா விவசாய சங்க நிர்வாகிகள், மதுரை மாவட்ட நெல் உற்பத்தியில் 50% திருமங்கலம், உசிலம்பட்டி பகுதியில் சுமார் 19,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வந்தாலும் எங்கள் பகுதியில் சராசரியை விட குறைந்த அளவே மழை பெய்துள்ளது. ஆனாலும் நிலத்தடி நீரை பயன்படுத்தி அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது வைகை அணை நிரம்பி வைகையாறு மற்றும் முல்லைப் பெரியாறு பாசன வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
எங்கள் பகுதிக்கு உரிய நீர் பங்கிட்டை தர கோரிக்கை வைத்து கடந்த 20 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். தமிழக அரசு குடிநீருக்காக வெறும் பத்து நாட்களுக்கு 230 கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இது எங்களையும் இப்பகுதி விவசாய மக்களையும் மிகுந்த ஏமாற்றம் அடைய செய்துள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு தரவேண்டிய உரிய நீர் பங்கீட்டை தர தமிழ்நாடு அரசு முன்வர
வேண்டும்.
குறைந்தபட்சம் 40-நாட்களுக்காவது தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுப்பதாக அவர்கள் கூறினர்.