ஹரியானா - பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி தொடங்கிய பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஷம்பு எல்லையில் இருந்து இவர்கள் நடைபயணமாக டெல்லி நோக்கி செல்ல திட்டமிட்டனர். இதுதொடர்பாக ஷம்பு எல்லையில் விவசாய சங்க தலைவர்களுடன் பஞ்சாப் காவல் துறை டிஐஜி மந்தீப் சிங் சித்து தலைமையில் உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டெல்லி நோக்கி அமைதியாக நடை பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், டிராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை எனவும் விவசாயிகள் உறுதி அளித்ததாக டிஐஜி மந்தீப் சிங் சித்து தெரிவித்தார். இந்நிலையில் சொன்னவாறே விவசாய சங்க தலைவர்கள் சுர்ஜித் சிங் பூல், சத்னம் சிங் பன்னு, சவீந்தர் சிங் சவுதாலா, பல்ஜிந்தர் சிங் சடியாலா மற்றும் மஞ்சித் சிங் ஆகியோர் தலைமையில் 101 விவசாயிகள் கொண்ட குழு இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை தொடங்கியது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி தொடங்கிய பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஷம்பு பகுதியில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், கைகளில் கொடிகளை ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரின் தடுப்புகளை அகற்றி, பேரணியை தொடர விவசாயிகள் முயற்சி செய்தனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக போலீசார் விவசாயி ஒருவரை கைது செய்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விவசாயிகளை போலீசார் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.