குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி - விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், பொய்யாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்.
இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில், அவரது மகன் சர்வேஸ்வரன் தனது இரு தம்பிகளுடன் இணைந்து விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவரது நிலத்திற்கு அருகில் ஆயுதப்படை காவலரான விஜயசாரதிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலையில் தன்னுடைய நிலத்திற்கு செல்ல வழி இல்லாததால், சர்வேஸ்வரன் விவசாயம் செய்து வரும் நிலத்தில் மண்ணை கொட்டி, விஜயசாரதி பாதை அமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: விஷ பாம்புகளுடன் பார்ட்டி செய்த விவகாரம்; காவல்நிலையத்தில் ஆஜரான யூடியூபர் எல்விஷ்...
பாதிக்கப்பட்ட சர்வேஸ்வரன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற சர்வேஸ்வரன், அங்கு குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சர்வேஸ்வரனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.