ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த பிரபல Stand-Up காமெடியன் - சூறையாடப்பட்ட ஸ்டூடியோ!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சராக பணியாற்றி வருகின்றனர். இதில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மற்றோரு பிரிவு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
இந்த நிலையில் அம்மாநிலத்தின் பிரபல Stand-Up காமெடி நடிகர் குணால் கம்ரா, தான் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவு குறித்து பேசி ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என விமர்சனம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் நிகழ்ச்சி நடத்த மும்பை கார் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள ஸ்டூடியோவை சூறையாடினர். இச்சம்பவம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ முர்ஜி படேல்,குணால் கம்ரா மீது வழக்கு தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “நகைச்சுவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் ஒரு உயர்மட்ட தலைவரை வேண்டுமென்றே அவமதித்து அவதூறு செய்ய முயற்சித்தால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் குணால் கம்ரா மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் அஜித் பவார், “ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், காவல்துறை தலையீட வேண்டிய தேவையை உருவாக்குவதாக அவை இருக்கக்கூடாது” எனப் பேசினார். ஒருபுறம் Stand-Up காமெடியன் குணால் கம்ராவுக்கு எதிராக ஆளும் கட்சியினர் பேசி வரும் நிலையில் மறுபுறம் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் நிகழ்ச்சி நடத்த இடைத்தை சூறையாடிதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.