சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி - உ.பி.யில் 144 தடை உத்தரவு!
உத்தரப்பிரதேசத்தில் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், மெள சதார் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றவர். இவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் உ.பி.யின் வெவ்வேறு நீதிமன்றங்களால் 8 வழக்குகளில் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த முக்தார் அன்சாரி, மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். முன்னதாக, சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்தார். 40 நாட்களுக்கு முன்பே விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்துள்ளதால், அந்த மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, பல நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.