சாக்லேட் தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்... கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்!
பிரிட்டனைச் சேர்ந்தவர் பால் புரூம் (55). இவர் மனநலச் சீர்வேண்டுவோர்க்கு உதவி செய்யும் பராமரிப்பு உதவியாளராக பணி புரிந்து வந்தார். இவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என சொல்லப்படுகிறது. இவர் அடிக்கடி தனது குடும்பத்தினரிடன் தான் இறந்த பிறகு 'Snickers' சாக்லேட் வடிவ சவப்பெட்டியில்தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று நகைச்சுவையாக கூறினார்.
இந்த நிலையில், இவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் பால் புரூமின் கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பினர். இதற்காக அவர்கள் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் வடிவில் ஒரு சவப்பெட்டியை தயார் செய்தனர். அதில் "I'm Nuts" (சிறுபிள்ளைதனமான என பொருள்படும்படி) என்ற வாசகத்தை சேர்த்தனர். இந்த வார்த்தை, அவரது நகைச்சுவை தன்மையை பிரதிபலிப்பதாக அவரது குடும்பத்தினர் எண்ணினர்.
பால் புரூம், கிரிஸ்டல் பாலஸ் FC கால்பந்து அணியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். இதனால், அவரது சவப்பெட்டியில் அந்த அணியின் லோகோவும் பதிக்கப்பட்டிருந்தது. பால் புரூமின் இறுதி ஊர்வலத்தில், அவருடைய நண்பர்கள் அவரை நினைவுகூரும் வகையில் டி-ஷர்ட்களை அணிந்து, கைத்தட்டல்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.