குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பகல் வேளைகளில் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடிக்கிறது. மேலும் வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் இதனால் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளார். அதேபோல், குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.