IRCTC போல் போலி இணையதளங்கள் உருவாக்கி நூதன மோசடி - போலீசார் தீவிர விசாரணை!
IRCTC போன்று போலி இணையதளம் உருவாக்கி தனியார் நிறுவன மேலாளரிடம் நூதன முறையில் ரூ.1.10 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வடபழனி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டி ரயில்வே இணையதளத்தில் (IRCTC) டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ரீதரன் ஊருக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ரயில்வே இணையதளத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துள்ளார். ஆனால் டிக்கெட் ரத்து செய்ததற்கான பணம் வராததால் ஸ்ரீதரன் மீண்டும் IRCTC இணையதளத்தில் சென்று கஸ்டமர் கேர் எண்ணை தேடியுள்ளார்.
அப்போது IRCTC இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த 98326 03458 எண்ணை தொடர்பு கொண்டு கேட்டபோது, எதிர்முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஸ்ரீதரின் கிரெடிட் கார்ட் விவரங்களை கேட்டு பெற்றதுடன் சற்று நேரத்தில் தங்களது பணம் உங்களது கார்டில் வரவு வைக்கப்படும் என தெரிவித்து இணைப்பை தூண்டித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இணைப்பு துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஸ்ரீதரனின் கணக்கில் இருந்து 1.10 லட்ச ரூபாய் எடுத்ததாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் இதுகுறித்து தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.