“தமிழ்நாட்டில் போலி சாதி சான்றிதழ் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது” - உச்ச நீதிமன்றம் கவலை தெரிவிப்பு!
தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் “இந்து கொண்டா ரெட்டி சமூகம்” என்ற பட்டியலின சமூக சான்றிதழ்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்
நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
இந்த வழக்கில், தனது மகனுக்கு இந்து கொண்டா ரெட்டி சமூகம் என்று சாதி சான்றிதழ் வழங்க பிரதீபா என்பவர் சார்பில் கோரப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை தொடர்பாக தாசில்தார் விசாரணை செய்த பின்னர் குறிப்பிட்ட சாதி சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. ஆனால் பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபருக்கு “இந்து கொண்டா ரெட்டி சமூகம்” என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்கனவே எதிர்மனுதாரர் மற்றும் குடும்பத்தினர் குறிப்பிட்ட பட்டியலின சமூகத்தை சார்ந்தவரா என்ற விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டியலின சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது. அதனை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
எனவே “இந்து கொண்டா ரெட்டி சமூகம்” என்று சாதி சான்றிதழ் வழங்க சென்னை
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள்,
“தமிழ்நாட்டில் போலி சாதி சான்றிதழ் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது, குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி நடைபெறுகிறது என்பது தெரிய வருகிறது.
மேலும் ஆயிரக்கணக்கான போலி சான்றிதழ் "இந்து கொண்டா ரெட்டி சமூகம்" என்ற பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்படுள்ளது என்பது தெரியவருகிறது. இது மிகவும் ஆபத்தானது ஆகும் என கருத்து தெரிவித்ததோடு, இந்து கொண்டா ரெட்டி சமூகம்” என்ற பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து சாதி சான்றிதழ் தொடர்பான மாநில அளவிலான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டனர்.