அரசு மருத்துவமனைகளில் போலி #Antibiotic | டால்கம் பவுடர் நிரப்பப்பட்ட மாத்திரைகளால் நோயாளிகள் அதிர்ச்சி!
அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் ஸ்டார்ச் மற்றும் டால்கம் பவுடர் கலந்து தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலி மருந்து விநியோக வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 1,200 பக்க குற்றப்பத்திரிகையில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹரித்துவாரில் உள்ள ஆய்வகத்தில் போலி ஆன்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் மேலும் கூறியிருப்பதாவது:
விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் போலி மருந்துகள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் உட்பட இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டன. போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலதிபர்கள் ஹவாலா மூலம் பணப் பரிவர்த்தனை செய்தனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூருக்கு கோடிக்கணக்கான ரூபாய் அனுப்பியுள்ளனர்.
போலி மருந்து விநியோக வழக்கில் ஹேமந்த் முலே முக்கிய குற்றவாளி. மேலும் மிஹிர் திரிவேதி, விஜய் சவுத்ரி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே மற்றொரு மோசடி வழக்கில் சிறையில் உள்ளனர். ராபின் தனேஜா என்ற ஹிமான்ஷு மற்றும் சஹரன்பூரைச் சேர்ந்த ராமன் தனேஜா ஆகியோரும் இந்த போலி மருந்து வணிகத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனேஜா சகோதரர்கள் அமித் திமான் பெயரை சூட்டியுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி அனில் மஸ்கே தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஹரித்வாரில் உள்ள அவரது ஆய்வகத்தை அடைந்தோம். உத்தரகாண்ட் எஸ்டிஎஃப் அதிகாரிகளால் திமான் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கிறார். அவரும் போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருந்தகத்தில் மாநில உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் சோதனை நடத்தினர். நோயாளிகள் அளித்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது போலியான 21,600 சிப்ரோஃப்ளோக்சசின் 500 மிகி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
"இதனையடுத்து அந்த மாத்திரைகள் சோதனைக்காக அரசு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, இந்த ஆய்வில் மாத்திரைகள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது.”என்று அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் முதல் நிமோனியா வரை பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆண்டிபயாடிக் மாத்திரைகள் போலியாக தயாரிக்கப்பட்டு நாக்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 2022 முதல் 2023 ஆம் டிசம்பர் வரை விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.