#FactCheck | ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ - உண்மைதானா?
This News Fact Checked by ‘BOOM’
கோபமடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் சிலர் எம்.எல்.ஏ குலாப் சிங் யாதவை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இந்த செய்தி குறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரை மக்கள் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த 'வீடியோவை பகிர்ந்த ஒருவர் “ சகோதரர்களே இந்த வீடியோ வைரலாக வேண்டும், பகிர்வதை நிறுத்தக்கூடாது “ என்று இந்த வீடியோ பகிரப்பட்டது. இதே பதிவில் மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் X கணக்கை டேக் செய்து, நீங்கள் செய்த பாவத்தின் அறுவடையை பாருங்கள்., மக்களை முட்டாளாக்கும் காலம் முடிந்துவிட்டது, மக்கள் உங்கள் கட்சியினரை எப்படி காலணிகளால் அடிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்' என்று எழுதியிருந்தார். இந்த வீடியோ தற்போதையதுதானா என்பதை அறிய பூம் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் உண்மைத் தன்மைக்கு உட்படுத்தியது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை உண்மை சரிபார்ப்பு சோதனைக்கு உட்படுத்தியபோது ஆம் ஆத்மி கட்சித் தலைவரை மக்கள் அடித்ததாகக் கூறுவது தவறானது என்றும் வைரலான வீடியோ 2 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தொடர்பான முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடுதலுக்கு உட்படுத்தியபோது, நவம்பர் 2022ல் இந்த வீடியோவை பல சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருப்பது கண்டறியப்பட்டது.
பாஜக தலைவர் தேஜிந்தர் பக்கா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது நவம்பர் 2022 இல் நடந்த சம்பவம் என்பதைக் கண்டறிந்தோம். ஏபிபி மற்றும் டைனிக் பாஸ்கரின் செய்தி அறிக்கையின்படி , "டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலுக்கு முன்னதாக, மத்தியாலாவின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குலாப் சிங் யாதவ், ஷியாம் விஹாரில் இரவு 8 மணியளவில் தனது கட்சியினருடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார். இதற்கிடையில், ஒரு சலசலப்பு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் மோதலை தொடர்ந்து குலாப் சிங் அங்கிருந்து ஓட வேண்டியதாயிற்று. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4, 2022 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் டிவி9 பாரத்வர்ஷின் வீடியோவாக இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவைத் தான் பயனர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர், இது சமீபத்தியது. 2022 ஆம் ஆண்டு நவம்பரில் ஆம் ஆத்மி கட்சியினர் எம்எல்ஏ குலாப் சிங் யாதவை தாக்கப்பட்ட பழைய சம்பவத்தின் வீடியோவை தற்போதையது என பகிர்கின்றனர். இதற்கும் நிகழ்காலத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
முடிவு :
கோபமடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் சிலர் எம்.எல்.ஏ குலாப் சிங் யாதவை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ நவம்பர் 2022 ல் எடுக்கப்பட்டது என்றும் தற்போதையது அல்ல என்பதும் பூம் அதன் உண்மைச் சரிபார்ப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.