Fact Check: புர்ஜ் கலிபாவில் ராமர் படம் - வைரலான செய்தி போலி என தகவல்!
அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி துபாய் புர்ஜ் கலீபாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் கூடிய படம் வெளியிடப்பட்டதாக இணையத்தில் வெளியான செய்தி போலி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நேற்று (ஜன.22) பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று (ஜன.23) முதல் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி முதலே, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் குவியத் தொடங்கினர்.
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் உட்பட இந்தியர்கள் வசிக்கும் சில நாடுகளில் ராமர் படத்துடன் கூடிய விளம்பரங்கள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி உலகின் மிகப் பெரிய கட்டடமான துபாய் புர்ஜ் கலீபாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் கூடிய படம் வெளியிடப்பட்டதாக இணையத்தில் செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் வைரலான செய்தி தவறானது எனவும் அது போலியாக உருவாக்கப்பட்டது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.