#America -வை நெருங்கும் அதி தீவிர புயல்... கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நாளை சக்தி வாய்ந்த புயல் தாக்கவுள்ள நிலையில் அப்பகுதியில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்து, கடந்த செப்.26ம் தேதி புளோரிடா பகுதியில் கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயல் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன.
மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் மக்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். ஹெலன் புயல் பாதிப்பை ஏற்படுத்திச் சென்ற சில நாட்களிலேயே மற்றொரு புயல் புளோரிடா பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதாவது, மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சக்தி வாய்ந்த புயலாக உருவாகி புளோரிடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு மில்டன் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் புளோரிடாவிலிருந்து மக்கள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. இந்த புயல் காரணமாக அதிவேக சூறாவளிக்காற்று வீசுவதுடன், கடும் மழைப்பொழிவும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் காரணமாக அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் புயல் கரையைக் கடக்கும்போது சற்று வலுவிழந்து ஆபத்து பிரிவில் 4-ஆம் நிலை புயலாக கரையைக் கடந்தாலும் காற்றின் வேகம் மணிக்கு 233 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், டாம்பா வளைகுடா பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று அமெரிக்க தேசிய புயல் மையம் எச்சரித்துள்ளது.
அதனுடன், 15 அடி உயரம் வரை கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் நகர்ந்து வரும் வேகத்தை கணக்கிட்டு நாளை (அக். 9) மில்டன் புயல் கரையைக் கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடாவில் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.