கடும் வெப்ப அலை | தினமும் 200 போன் கால்கள்... டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல்!
வட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி தங்களுக்கு 200 போன் அழைப்புகள் வருவதாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. இயல்பை விட 22 சதவிகிதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போதுமான அளவு பெய்திருக்கிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
டெல்லியில் 121.82 டிகிரி பாரன்கீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ராஜஸ்தானில் 122 டிகிரி பாரன்கீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல் குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் என வடமாநிலங்களில் வெப்பநிலை அதிகாம பதிவாகி வருகிறது.
தற்போது நிலவி வரும் வெப்ப அலை காரணமாக டெல்லியில் தீ விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தங்களுக்கு தினமும் 200 போன் அழைப்புகள் வருவதாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
"கடந்த ஆண்டு தினமும் 160 அழைப்புகள் எங்களுக்கு வந்தன. இந்த ஆண்டு இது 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. தினமும் 200 போன் கால்களை நாங்கள் பெறுகிறோம். மே 26ம் தேதி வரை எங்களுக்கு 2,991 அழைப்புகள் வந்திருக்கின்றன. குளிர் காலத்தில் 70-80 அழைப்புகள்தான் வரும். ஏசியை அதிக அளவில் பயன்படுத்துவது, மின் வயர்களை சரி பார்க்காமல் இருப்பதுதான் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு காரணம்.
கோடை காலத்தில் 24 மணி நேரமும் ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் அதை தாங்கும் அளவுக்கு தரமான ஒயர்கள் இருப்பதில்லை. குடியிருப்பு பகுதிகளை தவிர, மருத்துவமனைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றிலும் தீ விபத்துக்கள் அதிகம் பதிவாகியுள்ளன" என்று தெரிவித்தனர்.