ஐ.டி.ஐ-களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் விண்ணப்பிக்க வரும் ஜூன் 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"2023 ஆம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 24ம் தேதி முதல் பெறப்பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு ஐடிஐ மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வந்து நேரடியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணமான 50 ரூபாயை வங்கிக் கணக்கு அட்டை, இணைய வங்கி சேவை வாயிலாக செலுத்தலாம். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பேருந்து பயண அட்டை, வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, புதுக்கோட்டை- 04322-221584, விராலிமலை- 86674 26792 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.