ஏப்.23 வரை பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
பிஆர்எஸ் தலைவர் கவிதாவை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டார். கைதைத் தொடர்ந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். திஹார் சிறையில் இருக்கும் கவிதாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது.
அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் கடந்த ஏப். 11 ஆம் தேதி சிறையில் இருந்த கவிதாவை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில் இன்றுடன் கவிதாவின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது, அமலாக்கதுறை தரப்பில் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் இதனையேற்க மறுத்த நீதிமன்றம் ஏப். 23 ஆம் தேதி வரை கவிதாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.