கோயம்புத்தூர் - திண்டுக்கல் மெமு ரயில் சேவை நீட்டிப்பு!
கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே இயக்கப்பட்டு வரும், மெமு ரயில் சேவை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே தினந்தோறும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் - திண்டுக்கல் மெமு சிறப்பு ரயில் (06106), கோயம்புத்தூரில் இருந்து காலை 09.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.10 மணிக்கு திண்டுக்கல் போய் சேரும். மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06107) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.50 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.
இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. தென்மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால், இந்த ரயிலை அதிக அளவிலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சேவை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மெமு சிறப்பு ரயிலில் 8 ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.