டெல்லியில் மிக மோசமான நிலையில் நீடிக்கும் காற்றின் தரம்!
தலைநகர் டெல்லியில் காற்று மாசு 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது, மேலும் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் காற்று மாசு பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது.
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் காற்றின் தரம் 9 நாள்கள் ‘கடுமை’ பிரிவில் பதிவாகியிருந்தது. மேலும், அந்த மாதத்தில் 17 நாள்கள் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் நான்கு நாள்கள் ‘மோசம்’ பிரிவிலும் இருந்துள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், காற்று மாசு அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு(AQI) 364 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. ஆர்கே புரம், பஞ்சாபி பாக், விவேக் விஹார், ஜஹாங்கிர்புரி, துவாராகா செக்டர் ஆகிய பகுதிகளில் 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகியுள்ளது.