ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள குவகாத்தி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காமாக்யா ( வண்டி எண் 12551). இந்த ரயில் இன்று(மார்ச்.30) காலை 11.54 மணியளவில் ஒடிசாவின் கிழக்கு கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலைப் பிரிவின் கட்டக் - நெர்குண்டி ரயில்வே பிரிவில் உள்ள நெர்குண்டி நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, 11 ஏசி பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை, ஆனால் சம்பவ இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவக் குழு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிக்கித் தவிக்கும் பயணிகள் பாதுகாப்பாக தங்கள் ஊருக்கு செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை. தற்போது 8991124238 (கட்டாக்) மற்றும் 8455885999 (புவனேஸ்வர்) என்ற ரயில்வே உதவி எண்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. காமாக்யா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துள்ளானதால் அவ்வழியே வரும் தௌலி (வண்டி எண். 12822 ) ,நீலாச்சல் (வண்டி எண். 12875), புருலியா எஸ்எஃப் (வண்டி எண். 22606) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டு 288 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,175 காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.