பட்டுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு!
தஞ்சை மாவட்டம் நெய்வேலி தெற்கு, வாட்டாத்திக் கோட்டை அருகே பட்டாசு குடோனில் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பேர், பட்டாசு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் முகமது ரியாஸ் (19), சுந்தர்ராஜ்(60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது இருவரும் உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வாட்டாத்திக் கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிக்கும் இந்த குடோன் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் வேறு வெடிகள் வெடிக்காமல் அங்கு ஏதேனும் இருக்கிறதா என போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.