காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் - பிலிப்கார்ட் விளக்கம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ப்லிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் உணவு கிடங்கில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ப்லிப்கார்ட் நிறுவனமானது இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில், “பிலிப்கார்டில், எங்கள் வெர்ஹவுச்களில் உணவு பாதுகாப்புக்கான உயர்ந்த தரநிலைகளை பின்பற்றுவதற்கு நாங்கள் முழுமையாக உறுதி செய்துள்ளோம். இந்தியா முழுவதும் எங்கள் நிலையங்களில் நடைபெறும் உணவு பாதுகாப்பு ஆய்வுகளுக்கு நாங்கள் முறையாக ஒத்துழைக்கிறோம்.
காலாவதி ஆகிய தயாரிப்புகள் எங்கள் வழக்கமான தரமான சோதனைகளின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தன. அவை விற்பனைக்காக அல்லாமல், எப்போதும் தனியாகக் கையாளப்படும் பகுதிகளில் சேமிக்கப்பட்டிருந்தன. பொறுப்புள்ள சந்தை தளமாக, வாடிக்கையாளர் பாதுகாப்பும், தயாரிப்பு தரமும் எங்களுக்கு மிக முக்கியமானவை. எங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் தொடர்ந்து ஒழுங்குமுறையை பின்பற்றுவதற்காக, உணவு கையாளும் நெறிமுறைகளை எப்போதும் பலப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்”
என பிலிப்கார்ட் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.