காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கூட குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பு - மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை
காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு நடிநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியைதான் பெரும்பாலான மாணவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குடிநீர் தொட்டியில் இருந்து நீரைப் பிடித்து சத்துணவு ஊழியர்கள் சமையல் செய்ய செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று பிற்பகல் சத்துணவு ஊழியர்கள் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடிக்க முயன்றபோது அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து குடிநீரில் துர்நாற்றம் வீசியதால் மாணவர்களுக்கு உணவு வழங்காமல், உடனடியாக காவல்துறையினருக்கு பள்ளி ஆசிரியர்கள் தகவல் அளித்தனர்.
தகவல்களை கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிபுரம் காவல்துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் உள்ளிட்டோர் விசாரணை நடத்தியதில் குடிநீர்த் தொட்டிக்குள் மலம் கண்டறிந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறையின் அறிவுறுத்திலின் பேரில் தடயவியல் நிபுணர் குமரன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சம்பவ நடைபெற்ற பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வருகை தந்தார். பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் , காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.