KKR அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டம் - கடைசி பந்தில் RCB போராடி தோல்வி!
KKR அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் RCB போராடி தோல்வியை தழுவியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறக்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாட முயற்சியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழந்தார். ஆனலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 50 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரமந்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ஆண்ட்ரே ரஸலும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் 200 ரன்களைக் கடந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரமந்தீப் சிங் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார். மறுபக்கம் ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 6 விக்கெட் இழபிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் யாஷ் தயாள், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், டூப்ளெசியும் களமிறங்கினர். இவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதார் ஜோடி இணைந்து அணிகளின் ரன் எண்ணிக்கையை உயர்த்தி இருவரும் அரைசதம் அடித்து அவுட்டாகினர்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு வெளியேற கடைசி 1ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 200ரன்களை ஆர்சிபி கடந்திருந்தது. களத்தில் இருந்த கரண்சர்மா அதிரடியாக பந்தை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு 2 பந்துகளுக்கு 3ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை ஏற்படுத்தினார். எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க்கின் கையிலே கேட்ச் கொடுத்து வெளியேறி ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் கரண் சர்மா.
இதனையடுத்து 1பந்திற்கு மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் அடித்து ஆடிய சிராஜ் 2ரன்கள் எடுத்து சமன் செய்த முயற்சித்த ரன் அவுட் ஆகி 1ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.