தனியார் வங்கியில் வேலை எனக் கூறி ரூ.2 கோடி மோசடி - முன்னாள் பேராசிரியர் கைது!
தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்தவர் C.M.மாறன். ஓய்வு பெற்ற பேராசிரியரான இவரிடம் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் பட்டாபிராமன். இவர் தனது மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாங்கி தருவதற்காக வங்கி கணக்கு மூலமாகவும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.1,80,00,000 பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றிவிட்டு மாறன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பட்டாபிராமன் புகார் அளித்தார். மேலும் இப்புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : வெளிநாடு சென்ற கனடா பிரதமரின் விமானத்தில் பழுது – 3மாதத்தில் 2முறை பழுதானதால் சர்ச்சை.!
அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை செய்தனர். அப்போது தலைமறைவாக இருந்து வந்த மாறனை போலீசார் கைது செய்தனர். மேலும், பொதுமக்கள் யாரும், இதுபோன்று வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.