வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை... ஐசிசி அதிரடி!
ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ்-க்கு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் 18 ஆண்டுகள் விளையாடி 17 சதங்கள் அடித்துள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட பெருமை கொண்ட அவர் 2012 மற்றும் 2016 டி20 ஃபைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்று கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர்.
அதைத் தொடர்ந்து ஓய்வுக்கு பின் உலகின் பல்வேறு டி20 தொடர்களில் சாமுவேல்ஸ விளையாடி வந்த நிலையில் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதாக ஐசிசி கடந்த ஆண்டு குற்றம் சாட்டியது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக் தொடரில் விளையாடிய சாமுவேல்ஸ் விதிமுறைகளை மீறி 4 பிரிவின் கீழ் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்த ஐசிசி அதற்கான தண்டனைகள் பின்னர் வழங்கப்படும் என்று 2021 செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் விளையாட மார்லன் சாமுவேல்ஸ்க்கு 6 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக 2.4.2 விதிமுறைப்படி பரிசு, பணம், மற்றும் ஆடம்பர வசதிகள் இவற்றை சூதாட்டத்திற்காக பெற்றதை ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவிடம் சாமுவேல்ஸ சொல்லத் தவறியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும் 2.4.3 விதிமுறைப்படி 750 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளை சூதாட்டத்திற்காக பெற்றதை சொல்லத் தவறியது ஆகியவற்றை அவர் மீறியுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. அத்துடன் 2.4.6 விதிமுறைப்படி ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது, 2.4.7 விதிமுறைப்படி ஊழல் தடுப்பு அதிகாரிகளின் விசாரணையை தாமதப்படுத்தியது இவற்றையும் சேர்த்து மொத்தம் 4 சூதாட்ட விதிமுறைகளை மார்லன் சாமுவேல் மீறியுள்ளது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி ஜென்ரல் மேனேஜர் அலெக்ஸ் மார்சல் கூறியுள்ளார்.
எனவே அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த தடை வரும் நவம்பர் 2023 முதல் 2029-ம் ஆண்டு வரை நீடிக்கும் என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.