முன்னாள் அமைச்சர் #SenthilBalaji வழக்கு - கடந்து வந்த பாதை!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து விரிவாக காணலாம்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதன்மூலம் 471நாட்கள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
செந்தில் பாலாஜி வழக்கு - கடந்து வந்த பாதை
- கடந்த 2011-2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி வருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
- 2023 ஜூன் 13: வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
- 2023 ஜூன் 14: செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
- 2023 ஜூன் 14: பல மணிநேரம் விசாரணை வளைத்துக்குள் அமர வைக்கப்பட்ட செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- 2023 ஜூன் 21: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- 2023 ஜூலை 3: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்ட விதிகள் முறையாக பின்பற்றவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
- 2023 ஜூலை 14: நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், மேகலாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பரதசக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார்.
- செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
- 2024 பிப்ரவரி மாதம் - தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது என கருத்து தெரிவித்தால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்
- செந்தில்பாலாஜி ஜாமின் கேட்டு தொடர்ச்சியாக தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
- 5-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- செந்தில் பாலாஜியின் வழக்கை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
- இதுவரை 58 முறை செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துள்ளது
- 2024 மார்ச்18: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- 2024 செப்டம்பர்26: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று காலை ஜாமின் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது.