பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை!
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரம்மோஸ் விண்வெளித் துறையின் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு சார்பாக உளவு பார்த்ததாக கூறிய குற்றச்சாட்டில், முன்னாள் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாக்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நிஷாந்த் அகர்வால், பிரம்மோஸ் ஏவுகணை குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyenia ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் சிஸ்டம் இன்ஜினியராக இவர் பதவி வகித்து வந்தார். இந்த அமைப்பு இந்தியாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. இது நிலம், வான், கடல் மற்றும் நீருக்கடியில் உள்ள தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்ற நிஷாந்த் அகர்வால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது அவருடைய சகாக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமையான பொறியியலாளராகக் கருதப்படும் நிஷாந்த் அகர்வால், குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.