ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு - தலைவர்கள் இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
“ஈவிகேஎஸ் இளங்கோவன் அனைவராலும் தன்மானத் தலைவர் என்று போற்றப்பட்டவர். அவர் எதையும் வெளிப்படையாக பேசுபவர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு”
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எப்போதும் தனிப்பட்ட முறையில் உரிமையோடு பழகக் கூடியவர். பெரியாரின் குடும்பத்திலிருந்து வந்தாலும் காமராஜரின் அரசியல் பாதையை தேர்வு செய்து செயல்பட்டவர். செயற்கைத்தன்மையற்ற அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி
"ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு. புதுச்சேரியில் எப்போதும் தேர்தல் நடந்தாலும் எங்களுக்காக பிரசாரம் செய்தவர் அவர். ஒரு சிறந்த நண்பரை நான் இழந்துவிட்டேன்"
விசிக தலைவர் திருமாவளவன்
"காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. அவர் தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்"
விசிக எம்.பி ரவிக்குமார்
"ஈ.விகே.எஸ் இளங்கோவனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். விசிக போன்ற கட்சிகள் வளர்ந்து வர வேண்டும் என அடிக்கடி சொல்பவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்
"ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு கட்சி, குடும்பத்தை தாண்டி தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்த வந்த அவர் திமுக- காங்கிரஸ் உறவு நீடிக்க வேண்டும் என கருதினார். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"
மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் அருணன்
"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சமரசமில்லாமல் மதவாதத்தை எதிர்த்த ஒரு சமூக போராள. அரசியலை தாண்டி பண்பாட்டுத் தளத்திலும் மிகுந்த துணிச்சலுடன் அவர் செயல்பட்டவர். அவரது செயல்பாடுகள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது"
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
”ஈ.விகே.எஸ்.இளங்கோவன் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அரசிலுக்கு அப்பாற்பட்டு நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் அவர். காங்கிரஸ் - தமாக பிளவுபட்டபோது அதனை இணைப்பதற்கு பாலமாக செயல்பட்டவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"
தவெக தலைவர் விஜய்
"ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்"