"எல்லாம் பிரதமர் கையில் தான் உள்ளது" - மோடியைச் சந்தித்த பிறகு முதலமைச்சர் #MKStalin பேட்டி
பிரதமர் மோடி உடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு காவல் படையினர் மரியாதை அளித்தனர்.
டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த போது மூன்று முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"பிரதமர் மோடி உடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது. எங்களது கோரிக்கைகளை வைத்துள்ளோம். சென்னை மெட்ரோ முதல்கட்ட பணியை போல, இரண்டாம் கட்ட பணியையும் கால தாமதம் இன்றி செயல்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். சென்னை மெட்ரோ திட்டபணிகளுக்கு ரூ.18,664 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் நிதி வழங்கப்படவில்லை.சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் தொய்வின்றி நடைபெற நிதியை வழங்க கோரிக்கை வைத்தேன்.
தேசிய கல்வி கொள்கையில் உடன்பாடு இல்லை, அதனை திருத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். மேலும், நான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இதனால், மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இந்த காரணத்தினால், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. எனவே நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். அனைத்து கோரிக்கைகளையும் பிரதமர் மோடி கூர்ந்து கவனித்தார்."
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.