“கட்சியில் எல்லாவற்றையும், எல்லோரிடமும் ஆலோசிக்க முடியாது; விருப்பமுள்ளவர்கள் இருக்கலாம்” - #NTK தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகும் நிலையில், விருப்பமுள்ளவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லையெனில் விலகலாம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘சார்’ திரைப்படத்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“கல்வி மறுக்கப்பட சமூகத்தில் இருந்து வந்திருக்கும் நாங்கள், எப்படி படிக்கிறோம் என்பதை உலகிற்கு காட்டியுள்ளார் போஸ் வெங்கட். அனைவரின் பங்களிப்பும் அருமையான உள்ளது. கல்வியறிவு கிடைக்காத கிராமங்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்த, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் தலைமுறை செய்த சேவைதான் ‘சார்’ திரைப்படம். யார், யார் என்பதை ஆசிரியர்தான் நமக்கு அடையாளம் காட்டுபவர்கள். அருமையான திரைப்படம்.
திரைப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது எங்கள் கோட்பாடு; லட்டு விவகாரத்தை 5 நிமிடத்தில் முடித்திருக்க வேண்டும். தவறு செய்யாமல் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். அது அவரின் பெருந்தன்மை. தவெக மாநாட்டிற்கு மற்ற அரசியல் கட்சிகளை அழைக்கவேண்டாம் என கூறியுள்ளேன். அது சரியாக இருக்காது. நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகினால் பெட்ரோல், டீசல் விலை இறங்க போவதில்லை, ஏறப்போவதில்லை.
கட்சியில் மரியாதை இல்லை எனக் கூறும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் என்பதே மிகப்பெரிய மரியாதைதான். எல்லாவற்றையும் கலந்து ஆலோசித்து கொண்டிருக்க முடியாது. விருப்பமுள்ளவர்கள் கட்சியில் இருங்கள்” என சீமான் பேசினார்.