"தவெக என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது" - என். ஆனந்த் பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது,
"பூத் கமிட்டி முகவர்கள் என்றால் சாதாரணம் அல்ல. நீங்கள் அவ்வளவு முக்கியம். ஒவ்வாறு தொகுதியிலும் ஒருவரை நியமிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்ச தவெக தொண்டர்கள் உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் வந்து விட்டது. ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கக்கூடியவர் நம் தவெக தலைவர் விஜய்தான். நமக்கு ஒவ்வொரு தொகுதியிலும், 80 முதல் 85 ஆயிரம் வாக்குகள் கிடைத்துவிடும்.
அது பெரிது அல்ல. நாம் 1,20,000 அல்லது 1,30,000 வாக்குகள் பெற வேண்டும். ஏனென்றால் 27 அல்லது 100 வாக்குகளில் வெற்றி பெற்றவர்களும் உள்ளனர், தோல்வி அடைந்தவர்களம் உள்ளனர். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். 234 தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் தான் வேட்பாளவர் என்று எண்ணி நீங்கள் வேலை செய்ய வேண்டும். மக்களிடையே சென்று அவர்களின் பிரச்னையை கேட்டு தீர்வு காண வேண்டும். 10 மாதங்கள் நீங்கள் நன்றாக உழைத்தால், 2026ல் விஜய் முதலமைச்சராகி உங்களையும், உங்களுடைய குடும்பத்தினரையும் பார்த்துக் கொள்வார்.
பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்களை கோவையில் தொடங்கியுள்ளோம். இதேபோன்று, 4 மண்டலங்களில் கூட்டங்கள் நடைபெற தலைவர் விஜய் ஏற்பாடு செய்துள்ளார். நீங்கள் அனைவரும் மக்களோடு மக்களாக இருந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மக்கள் தான் நமக்கு மிகவும் முக்கியம். எந்த விஷயமாக இருந்தாலும் உங்கள் மாவட்ட செயலாளாரை அணுக வேண்டும்"
இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்தார்.