“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” - உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!
வக்ஃபு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா :-
நீதிமன்றம் மூன்று விசயங்களை ஒதுக்கியது, அதற்கான பதிலை தாக்கல் செய்தோம். ஆனால், மனுதாரர்களின் எழுத்துப்பூர்வ வாதங்கள் பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. எனவே தற்போது இடைக்கால உத்தரவை நீக்குவது தொடர்பான விவகாரத்தில் மட்டும் வாதம் வைக்க வேண்டும்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி :
இது வக்ஃபு நிலங்களை கைப்பற்றுவது தொடர்பான விவகாரம் ஆகும். அப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட சாராம்சத்தில் மட்டும் விசாரணை நடத்த முடியாது. எனவே வழக்கின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் விடை காணும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும்.
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்:-
வக்ஃபு சட்டம் என்பது வக்ஃபு நிலங்களை பாதுகாப்பதற்கானது. ஆனால் இந்த புதிய வக்ஃபு சட்டம் வக்ஃபு நிலங்களை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வக்ஃபு சொத்துக்கள் எந்த செயல்முறையையும் பின்பற்றாமல் பறிமுதல் செய்யப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வக்ஃபு சொத்தின் மீது ஒருவர் பிரச்சனையை கிளப்பினால் அதன் மீது அரசு அதிகாரி முடிவு செய்யப்படும் வரை, அது வக்ஃபு சொத்தாக இருக்காது. அப்படியெனில் இந்த விசயத்தில் யார் வேண்டுமானாலும் ஒரு சர்ச்சையை கிளப்பலாமே.
வக்ஃபு என்றால் கடவுளுக்காக கொடுக்கப்படும் ஒரு கொடை அல்லது நன்கொடை. அவ்வாறு கடவுளுக்கு அர்ப்பணிப்பதை யாரும் மாற்ற முடியாது. ஒருமுறை வக்ஃபு என்று வழங்கினால் அது எப்போதும் வக்ஃபு தான். மத அமைப்புகளுக்கு முழுமையாக நிதி வழங்கும் வகையில் நமது அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை.
அந்த வகையில் இஸ்லாமியர்கள் மசூதிகளை, தர்காக்களை பராமரிப்பதற்கு நிதி பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கான இடுகாடுகளை அடையாளம் காண்பது இவற்றிற்கெல்லாம் தனியார் நிலங்கள் தான் தேவைப்படுகிறது. அதனால் தான் இஸ்லாமை பின்பற்றும் பலர் தங்களது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தங்களது நிலம் உள்ளிட்ட சொத்துகளை வக்ஃபுவுக்கு வழங்குகிறார்கள்.
தலைமை நீதிபதி:-
பழைய சட்டத்தில் பதிவு செய்வது என்பது கட்டாயமா அல்லது தானாக பதிவு செய்வதா?.
கபில் சிபல்:-
பழைய சட்டத்தின் படி நிலத்தை பதிவு செய்வதற்கு Shall என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி :-
அப்படியெனில் பதிவு செய்வது என்பது கட்டாயம் அல்ல என்று தான் அர்த்தமாக கொள்ள முடியும், பதிவு செய்யவில்லை என்றால் விளைவுகள் வருமே.
கபில் சிபல் :-
எந்த ஒரு பிரச்சனைகளும் எழுவதில்லை.
தலைமை நீதிபதி :-
வக்ஃபு சொத்து பதிவு செய்யவில்லை என்றாலும் எந்த ஒரு பிரச்சனையும் எழுவதில்லை என்ற உங்களின் வாதத்தை நாங்கள் பதிவு செய்கிறோம். அப்படியானால் 2025க்கு முன்பு பயனரால் வக்ஃபு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
கபில் சிபல்:-
1923 சட்டத்திபடி முத்தவல்லி என்பவர் பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு அவர் செய்யவில்லை என்றால் அவரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ்:-
பழைய சட்டத்தின் கீழ் வக்ஃபு ஆக பதிவு செய்வது கட்டாயமா?.
கபில் சிபல்:-
ஆம் 1923 சட்டத்தின்படி முத்தவல்லி அதைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பதிவு செய்யவில்லை என்றாலும் அது வக்ஃபு சொத்தாக இருப்பதற்கு தடை இல்லை.
தலைமை நீதிபதி:
எனவே 1923 முதல் பதிவு தேவைப்பட்டது. ஆனால் அதைச் செய்யாமல் இருந்தாலும் எந்த விளைவுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?.
கபில் சிபல்:-
புதிய சட்டத்துன்படி வக்ஃபு-வுக்கு தானம் வழங்க ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கால அளவை யார் முடிவு செய்வது?. ஒருவேளை இறக்கும் தருவாயில் இருக்கும் போது வக்ஃபு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு நான் இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இது அரசியல் சாசன விதிமுறைகளுக்கு முழுமையாக எதிரானது.
அடுத்ததாக பழங்குடியினர் வக்ஃபு சொத்துகளை கொடுக்க முடியாது என சொல்லப்பட்டிருக்கின்றது. பழங்குடியினராக இருக்கும் ஒருவர் இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு தனது மதக் கடமையை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த புதிய சட்டம் தடையாக இருக்கிறது.
சுதந்திரமாக மதத்தை கடைபிடிக்கலாம் என்ற அடிப்படை உரிமையை மீறும் வகையில் இருக்கிறது. முன்பு வக்ஃபு வாரியங்களில் தேர்தல் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமனம் நடந்தது. தற்போது இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமன முறையில் உறுப்பினர்களாக கொண்டுவர சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல அரசியல் சாசன பிரிவுகள் இந்த சட்டத்தில் மீறப்பட்டுள்ளன. வக்ஃபு சொத்து குறித்த பிரச்னைகள் எழும் போது மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என்பது மிக மோசமானது. விதிமுறைகள் படி இல்லாத சொத்துக்கள் வக்ஃபு சொத்து அல்ல என்று அறிவிக்கும் அதிகாரம் ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது, நீதிபதிகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் வக்ஃபு சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ளுமா? என கேள்வி.
கபில் சிபல்:-
என்ன விசாரணை நடத்தப்படும் என்று சட்ட நடைமுறைகள் குறிப்பிடப்படவில்லை. ஆட்சியர் வக்ஃபு சொத்து அல்ல என்று அறிக்கை வழங்கியதும் அரசின் வருவாய் ஆவணங்கள் திருத்தப்படும், பின்னர் வக்ஃபு வாரியத்திற்கு அறிவிக்கப்படும்.
வக்ஃபுவுக்கு தானம் கொடுக்க தான் இஸ்லாமியர் என்றும், ஐந்து ஆண்டுகள் இஸ்லாமை பின்பற்றினேன் என்றும் சான்று அளிக்க கோருகிறது. புதிய சட்டம்
இது ஒரு மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். எனவே இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
இதனையடுத்த கட்டுப்பாடு, waqf by users என்பதை நீக்குவதற்கான நடைமுறை. இவ்வாறு வக்ஃபு சொத்துக்களை எடுத்துக் கொள்வதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ அனைத்தையும் புதிய சட்டம் மூலமாக அரசு கொண்டுவந்துள்ளது.
அதன் அடிப்படையில் waqf by users என்பதில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் என அரசு கூறுகிறது. அப்படியெனில் எவரேனும் ஒருவர் பதிவி செய்யப்படாத waqf by users சொத்து மீது ஒரு சந்தேகத்தை கிளப்பினால் அது உடனடியாக பறிபோகும் நிலைமையை ஏற்படுத்துகிறது புதிய சட்டம்.
வக்ஃபு சொத்து மீது பஞ்சாயத்து, முனிசிபல் அமைப்புக்கள் என்று யார் புகார் தெரிவித்தாலும் அதனை அரசு எடுத்துக் கொள்ளும் நிலமை சட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. வக்ஃபு சொத்தை உருவாக்கியவர்கள் பெயர் தேதி உள்ளிட்ட விபரங்களை வாங்கினால் தான் தற்போது பதிவு செய்ய முடியும். இணையதளத்தில் வெளியிட முடியும். அப்படியெனில் 200 ஆண்டுகள் முந்தைய சொத்துகளின் விபரங்கள் எப்படி பெற முடியும்?. அப்படி வழங்காவிட்டால் நிர்வாகிகளுக்கு 6 மாத சிறை என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு மத கட்டமைப்பு ஒரு பழங்கால நினைவுச் சின்னமாகவும் இருக்கலாம், ஆனால் பண்டைய நினைவுச்சின்ன சட்டத்தின்படி அது பாதுகாககப்பட வேண்டும் என்பதே அந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் புதிய வக்ஃபு சட்டம் பண்டைய நினைவுச்சின்னமாக இருந்தால் வக்ஃபு செல்லாது என கூறுகிறது.
முந்தைய சட்டங்கள் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளை பறிக்காத வண்ணம் இருந்தது. ஆனால் புதிய வக்ஃபு சட்டம் அதனை பறிக்கும் வகையில் உள்ளது. தாஜ்மகால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக உள்ளது. இந்த புதிய வக்ஃபு சட்டம் பின்னோக்கி சென்று அதன் வக்ஃபு தன்மையை இழக்கச் செய்கிறது. புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது.
வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.