“நிலவுக்கு போனால் கூட இவ்வளவு ஆகாது” - ரூ.7.66 கோடி பில்... ஊபர் பயணி ஷாக்...
ஊபர் ஆட்டோ புக் செய்த டெல்லி இளைஞருக்கு ரூ.7.66 கோடி கட்டணம் செலுத்துமாறு பில் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நொய்டாவை சேர்ந்த இளைஞர் தீபக் தெங்குரியா வழக்கமாக ஊபர் ஆட்டோவை பயன்படுத்தும் வாடிக்கையாளர். இவர் நேற்று (மார்ச் 30) வழக்கம் போல ஊபர் செயலியை பயன்படுத்தி ஆட்டோவை புக் செய்துள்ளார். அப்போது அவர் ரூ.62 செலுத்த வேண்டும் என செயலியில் காட்டியுள்ளது. ஆனால், ஆட்டோவில் பயணிக்க தொடங்கியவுடன் "உங்கள் பயணத்திற்காக ரூ.7.66 கோடியை செலுத்த வேண்டும்" என்று என செயலியில் காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யும் போது குறிப்பிட்டிருந்த இடத்தை கடந்து வேறு ஒரு இடத்தில் அவர் இறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் பயணத்தை முடிக்கும் முன் கட்டண தொகை பில்லாக வந்துள்ளது. அதுவும், ரூ.7.66 கோடி கட்டணமாக வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தீபக் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வீடியோவுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்த தீபக், சந்திரனுக்கு சென்றால் கூட இவ்வளவு செலவு ஆகாது என்று கூறியுள்ளார்.
கட்டணம் குறித்த ஸ்கிரீன்ஷாட்டும், வீடியோவும் சமூகவலைதளத்தை கலக்கிக்கொண்டிருந்த நிலையில், ஊபர் இதற்கு பதிலளித்துள்ளது. அதில், "இந்த சிக்கலை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். விரைவில் இது சரி செய்யப்படும். ஆனால் சிறிது நேரம் ஆகும்" என்று தெரிவித்திருக்கிறது. ஊபர் ஆட்டோவுக்கு ரூ.62 கட்டணத்திற்கு பதிலாக ரூ.7.66 கோடி பில் வந்துள்ள சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.