“நான் வீல் சேரில் இருந்தாலும்...” - ஓய்வு குறித்து தோனியின் நகைச்சுவை பதில்!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று(மார்ச்.22) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அப்போது கொல்கத்தாவை எதிர்கொண்ட பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (மார்ச்.23) மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்போட்டியின்போது சென்னை அணியில் தோனி என்ன ரோலில் விளையாட உள்ளார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதே போல் ஒவ்வொரு சீசனும் அவரது கடைசியா சீசனா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் தனது ஓய்வு குறித்து தோனி ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.அப்போது அவர் கூறியதாவது, “சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் வீல் சேரில் இருந்தாலும், என்னை விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார்.
அதே போல் செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனிக்கு இது கடைசி சீசனா? என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் , “சச்சின் டெண்டுல்கர் 50 வயதில் கூட சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே, இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்தார்.