யூரோ கால்பந்து போட்டி - பிரான்ஸை வீழ்த்தி அதிரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி!
யூரோ கால்பந்து போட்டியின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலி, தொடரை நடத்தும் ஜெர்மனி, ரொனால்டோவின் போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் வெளியேறின. இதனைத் தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.
யூரோ கால்பந்தில் ஆறாவது முறையாக அரையிறுதியில் பங்கேற்கிறது ஸ்பெயின். இதில் 2020 தவிர, மற்ற 5 முறையும் பைனலுக்கு முன்னேறியது. அதேபோல பிரான்ஸ் 5 முறை அரையிறுதியில் பங்கேற்று, 3 முறை பைனலுக்குள் நுழைந்தது. ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் இதுவரை 36 போட்டிகளில் மோதியுள்ளன.
இதில் ஸ்பெயின் 16போட்டிகளிலும், பிரான்ஸ் 13 போட்டிகளிலும் வென்றுள்ளது. 7 போட்டி 'டிரா' ஆனது. இந்நிலையில் நேற்று இரு அணிகளும் மோதின.
போட்டி துவங்கியது முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஸ்பெயின் அணியின் இளம் வீரரான யமால் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில் போட்டியானது சமனில் சென்று கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 4-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோ கோல் அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலை வகித்தது. போட்டி முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது. இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது.