எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக இருந்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சேற்றில் சிக்கியவர்களில் 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலச்சரிவினால் பலர் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளனர். எத்தியோப்பியாவில் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் ஏற்படுவது பொதுவானவை. அதிலும் ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நிலச்சரிவுகள் ஏற்படுவது நீடிக்கும். இருப்பினும் எத்தியோப்பியாவில் நேரிட்டுள்ள மிக மோசமான இயற்கைப் பேரிடா் இது என்று கூறப்படுகிறது.