ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு திருச்சி தொகுதி இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த முறை ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதி இந்த முறை மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் ஈரோட்டில் போட்டியிட்டு வென்ற மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு, இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 24-ம் தேதி கோவை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அது தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கணேசமூர்த்திக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டும், சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 28) காலை 5 மணியளவில் கணேசமூர்த்தி உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கணேசமூர்த்தியின் மறைவு மதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.