ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் சிக்கிய 18 பாம்புகள்!
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நேற்று ஒரே நாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்த போது 18 பாம்புகள் சிக்கின.
தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழிபாடு செய்வதற்காக வீடுகளை சுத்தம் செய்வது வழக்கம்.
அவ்வாறு சுத்தம் செய்யும் பணியின்போது சிலரது வீடுகளில் பதுங்கியிருந்த பாம்புகளை பாம்பு பிடி வீரர் ஒருவர் எவ்வித உபகரணங்களும் இன்றி பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட குமலன்குட்டை, செல்வம்நகர், மாணிக்கம் நகர், சக்தி நகர், சோலார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்த போது ஏசி கார் பார்க்கிங், மெத்தை படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 3அடி முதல் 10அடி வரையில் கோதுமை நாகம்,கண்ணாடி விரியன் உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகள் சிக்கின.
இவற்றை பிரபல பாம்பு பிடி வீரர் யுவராஜ் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், தான் இதுவரையில் 34 ஆயிரத்து 800 பாம்புகளை பிடித்துள்ளதாகவும்,14 ஆண்டுகளாக இத்தொழிலில் உள்ளதாகவும், ஆனால் தனக்கு இதுவரையில் அரசு சார்பில் எவ்வித அங்கீகாரம் வழங்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
வேந்தன்