ஈரோடு | பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு - கேரள வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பகுதியில் கேரள ஜவுளி வியாபாரியிடம் 1 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5- ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படையினர் கிழக்கு தொகுத்திக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம்தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக பல்வேறு பகுதியில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு மக்கள் சந்தைகளுக்கும் கடை வீதிகளுக்கும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஈரோட்டில் ஜவுளி சந்தைக்கு தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஜவுளி வியாபாரிகள் வருகை தந்தனர். இங்கு வியாபாரிகள் ஜவுளி ரகங்களை மொத்தமாக கொள் முதல் செய்தனர்.
இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள ஜவுளி சந்தை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கேரளா மாநிலத்தில் இருந்து வந்த முஸ்தபா என்ற ஜவுளி வியாபாரி ஜவுளி ரகங்களை மொத்தமாக வாங்க வந்திருந்தார். அவரிடம் இருந்து 1- லட்சம் ரூபாய் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலமாக பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.