ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதையடுத்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக, பாஜக, தவெக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பொங்கலுக்கு வேட்பாளரை அறிவிப்பதாகக் அறிவித்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜன.10ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் நாள் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை தினம் என்பதால் 2வது நாளான இன்று (ஜன.03) அதிக அளவில் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி சேலத்தைச் சேர்ந்த ராஜசேகர், கோவைச் சேர்ந்த நூறு முகமது (2வது முறையாக) ஈரோட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், முகமது கைபீர், தர்ம லிங்கம், தனஞ்செயன், சென்னைச் சேர்ந்த இசக்கிமுத்து, தருமபுரியைச் சேர்ந்த ஆனந்தன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பானைமணி ஆகிய 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்மூலம் இதுவரை 12 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.