ஈரோடு இடைத்தேர்தல் - பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க 3 பறக்கும் படை, குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரை ஓட்டி வந்தவரிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது.
அவரிடம், விசாரணை நடத்தியதில், அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் மாட்டு வியாபாரி என்பதும் தெரியவந்தது. கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்க பணத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார். இருப்பினும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.